அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்திற்கு அழகு சேர்ப்பதே சிரிப்பு தான். அவ்வாறு சிரிக்கும் போது தெரியும் பற்களை அழகாகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பது அவசியம்.
எமது பேச்சின் உச்சரிப்பை திருத்தமாக வெளிக்கொணர்வதும் பற்களே . ஆகவே அதனை பாதுகாப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். அனைவருமே தத்தமது பற்களை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.
அனைவரும் தமது பற்களை நேசிக்க ஒரு காரணம் பற்கள் அவர்களின் வெளிப்புற தோற்றத்தை காட்டுவதாலாகும் . அதாவது பல் ஒழுங்காக இல்லாவிட்டாலோ அல்லது அல்லது இடையிடையே இடைவெளி இருந்தாலோ நமது தோற்றத்தையே அது மாற்றிவிடும்.
இவை எல்லாவற்றையும் விட பற்சுகாதாரம் நமது ஆரோக்கியத்தின் ஓர் முக்கிய அம்சமாகும். எனவே இவ்வாறான முக்கியத்துவம் மிக்க பற்களை பாதுகாத்து அதன் அழகை பேணுவதற்கான சில அழகு குறிப்புக்கள் பற்றி இன்றைய இந்த பகுதியில் பார்ப்போம்.
பற்களின் அழகு மற்றும் சுகாதாரம் குறித்து சிறுவயதிலிருந்தே அறிவுறுத்தப்படுகின்ற ஓர் விடயமாகும். பற்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க தினமும் இரு தடவைகள் பல் துலக்குதல் அவசியமாகும். அதேபோல தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின்னர் பல் துலக்குதல் வேண்டும்.
பல் துலக்கும் போது மென்மையானதும் நேரானதுமான பற்தூரிகையை தெரிவு செய்ய வேண்டும். பல் துலக்கும் போது அதிக அழுத்தம் கொடுக்க கூடாது. அது பற்களின் ஈறுகளுக்கு குந்தகமாய் அமையக்கூடும்.
அதேபோல பற்பசைகளை தேர்ந்தெடுக்கும்போதும் கவனம் செலுத்த வேண்டும். புளோரைட் கொண்ட பற்பசைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இது வைத்தியர்களின் பரிந்துரையும் கூட. உண்மையில் பல் துலக்குவதன் மூலம் பற்கள் சுத்தமாவதில்லை . பல் வைத்தியர்களின் ஆலோசனைப்படி வாயையும் பற்களையும் சுத்தமாக்கும் மருந்து வகைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
அவற்றால் அடிக்கடி வாயை கொப்பளித்தல் அவசியமாகின்றது. மேலும் பற்களை வலுப்படுத்தும் உணவு வகைகளில் கவனம் எடுக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் பற்களில் கறைபடியாது.
மேலும் பழங்கள், காய்கறிகள், மீன்வகைகள், முடடை, பால், பருப்புவகைகள் என்பனவும் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனால் விற்றமின் 'ஏ' மற்றும் 'சி' என்பன கிடைக்கிறது.
இவற்றால் பற்கள் பலமடைகின்றன. எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வந்தால் அழகும் ஆரோக்கியமும் மிக்க பற்களை பேணி பாதுகாக்கலாம்.