நறுமணத்திற்காக சமையலின்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலை உண்மையில் ஒரு மூலிகை ஆகும். இந்த மூலிகையை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இன்றைய அழகுக்குறிப்புகள் பகுதியில் பார்ப்போம்.
ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக வரும் நரைமுடி பிரச்சினையை போக்க கறிவேப்பிலை சாப்பிடுவது நல்லது. கறிவேப்பிலையில் உள்ள விற்றமின் 'பி' மெலனின் உற்பத்திக்கு உதவிபுரிவதால் கருமையான தலைமுடி பெற உதவுகிறது.
மேலும் கறிவேப்பிலை அல்லது கறிவேப்பிலை மரத்தின் குச்சிகளை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெயினை கொண்டு தலைக்கு பயன்படுத்திவருவது நீளமான கூந்தல் பெற உதவும். முடி உதிர்வு பிரச்சினைக்கும் தீர்வை தரும். அதேபோல தேங்காய் எண்ணெயுடன் கறிவேப்பிலை சேர்த்து காய்ச்சி பின்னர் இந்த எண்ணெயினை வடிகட்டி தலைக்கு தனியே பயன்படுத்தி வர தலைமுடி வெடிப்பு மற்றும் சேதம் ஏற்படுவது குறையும்.
மேலும் கறிவேப்பிலை எண்ணெயினை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வர தோல் தடிப்பு மற்றும் உச்சந்தலை வறட்சி போன்ற பிரச்சினைகளும் தீரும். இதன்முலம் பொடுகு தொல்லை இல்லாத கூந்தல் பெற கறிவேப்பிலை உதவுகிறது. எண்ணெய் அல்லது கேர் பேக் என ஏதேனும் ஒரு வடிவத்தில் தலைமுடிக்கு கறிவேப்பிலை பயன்படுத்தி வர தலைமுடி மிருதுவாகவும் மென்மையாகவும் மாறிவரும்.
மேலும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்ட சத்துக்களை கொண்டுள்ள கறிவேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை தொடர்ந்து குடித்து வர கூந்தல் ஆரோக்கியம் பெறும் .
முக்கியமாக்க கறிவேப்பிலையில் காணப்படும் மருத்துவ குணம் கூந்தலை சீராக பாதுகாக்கும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி கறிவேப்பிலை மூலம் கூந்தல் முடியினை பேணி பராமரிப்போம்.