விண்வெளியில் உயிர் வாழ்வதற்கு ஒக்சிஜன் என்பது மிகவும் அத்தியாவசியமானது. ஆனால், அதை நீண்ட தூர விண்வெளிப் பயணங்களுக்குப் பெரிய சிலிண்டர்களில் எடுத்துச் செல்வது என்பது சாத்தியமற்றது.
இதனால், விண்வெளிப் பயணத்தின்போது, விண்வெளி வீரர்கள் சுவாசிக்கத் தேவையான ஒக்சிஜனை அங்கேயே உற்பத்தி செய்ய வேண்டும்.
இந்நிலையில் நாசாவின் 'இன்னோவேடிவ் அட்வான்ஸ்ட் கன்செப்ட்ஸ்' திட்டத்தின் கீழ், புதிய ஆய்வு நடைபெறுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில், தண்ணீரைச் சுழற்சிக்கு உட்படுத்தி, சக்திவாய்ந்த காந்தங்களைப் பயன்படுத்தி, அதில் இருந்து ஒக்சிஜன், ஹைட்ரஜனைப் பிரிக்கிறார்கள்.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயன்படுத்தப்படும் ஒக்சிஜன் உற்பத்தி அமைப்பை விட, உபகரணங்களின் எடையை சுமார் 50% வரை குறைக்கும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார்கள். ஒரு நாளைக்கு 4 விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவுக்கு சுமார் 3.36 கிலோகிராம் ஆக்சிஜன் தேவைப்படும்.
இந்த எடை குறைப்பு, விண்கலத்தை இலகுவாக மாற்றவும், உதிரி பாகங்கள் தேவையை குறைக்கவும், பயணத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்றவும் உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.