38,785 Views
தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வருடம் தோறும், தமது தொலைக்காட்சியின் பெயரில் தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வை நடத்தி வருவது தெரிந்ததே.இந்தநிலையில், இம்முறையும் விருது வழங்கும் நிகழ்வை நடத்திய இந்தத் தொலைக்காட்சி அதிக வரவேற்பைப் பெறுவதற்குப் பதிலாக, பலத்த வெறுப்பையும் விமர்சனங்களையுமே சம்பாதித்துக் கொண்டுள்ளதாம்.
இந்தத் தொலைக்காட்சி விருதுகள் ஆறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. அதிலும் சிறப்பு என்னவென்றால் விருதுக்கு தெரிவு செய்யப்படும் நடிகர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்கள் மக்களின் வாக்குகளாலேயே தெரிவு செய்யப்படுவது என்பதே. இந்த ஆறு பிரிவுகளிலும் முக்கியமானது என்னவென்றால் மிகவும் பிடித்தமான நடிகர்(Favorite Hero) யார் என்று தெரிவு செய்யப்படுவதற்கான விருதே அது.
ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுகின்ற நடிகர் யார் என்ற விருதுக்கான போட்டியில் முன்னணி நடிகர்களுடைய பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டிருந்தன. இந்தநிலையில் "தல"அஜித் மற்றும் "இளையதளபதி" விஜய் ஆகியோரின் பெயர்களில் பெரும் போட்டி நிலவியிருந்ததாம். ஏனெனில், இந்த இருவருடைய ரசிகர்களும் தங்களுக்கு பிடித்தவரை முன்னிலைக்கு கொண்டு வந்து விருதை பெறவைக்கும் முயற்சியில் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டதே காரணம் என சொல்கிறார்கள் விஷயம் அறிந்த தரப்பினர்.
இவ்வாறு கடும் போட்டிக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த விருதுக்கான வாக்கெடுப்பில் தொடக்கம் முதலே முன்னிலை வகித்தது "தல"அஜித் தான் என்பதுடன், விருதுக்கு இறுதியில் தேர்வு செய்யப்பட்டதும் அவரே தான் என்கிறார்கள் இந்த விருது விழாவுடன் தொடர்புடையவர்கள். இருந்தும் இந்த விருதினை "தல" ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் சொல்கிறார்கள் இவர்கள்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த விருதை அஜித் ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கான காரணத்தையும் அவர்களே சொல்கிறார்கள். 'இந்த விருது அஜித்திற்கு கிடைக்கவிருந்தது. அதற்கான வாக்கினை ரசிகர்கள் வழங்கியிருந்தனர். ஆனாலும் அந்த விருதை அஜித்திற்கு நேரில் வழங்கவிருந்தவரே, "தல"யின் இந்த மறுப்பிற்கான காரணமாம். ஏனென்றால் அந்த விருதை வழங்கவிருந்தவர் வேறுயாருமல்ல, இயக்குனர் பாலா என்பதே'.
ஏற்கனவே "நான் கடவுள்" திரைப்படத்தின் காரணமாக இயக்குனர் பாலாவுக்கும், அஜித்துக்கும் இடையில் மிகப்பெரும் மனக்கசப்பு ஏற்பட்டது எல்லோருமே அறிந்த விஷயம் தான். அதுவே இந்த விருது நிகழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 'பாலா கையால் விருது கிடைக்க வேண்டுமென்றால் அந்த விருதே எனக்கு தேவையில்லை' என்று அஜித் கூறினார் என்கிறார்கள் திரைத்துறையினர்.
இது இவ்வாறிருக்க, இந்த விருதை 'தல'க்கு எப்படியாவது வழங்கி வைக்க, விருது விழாவை நடத்திய அந்த தொலைக்காட்சி நிறுவனமும் திரைத்துறையினரும் எடுத்த எல்லா முயற்சிகளும் அஜித்திடம் எடுபடவே இல்லையாம். இதன் காரணமாக, இறுதியில் அந்த விருதை நம்ம "சூப்பர்ஸ்டார்" ரஜினிக்கு வழங்க முடிவு செய்தார்களாம் அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தினர். இதை எவ்வாறோ மோப்பம் பிடித்த நம்ம சூப்பர்ஸ்டார், அந்த விழாவுக்கே வராமல் கல்தா கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
எது எப்படியோ, யாரையெல்லாம் விருது வழங்க அழைத்தார்களோ அவர்களாலேயே மறுக்கப்பட்ட கேலிக்கூத்தாக மாறியுள்ளது இந்த விழா என்பதே மறுக்கப்பட முடியாத உண்மை.
*S.G.R