"என் பெயர் லூ வின்சென்ட், நான் ஒரு ஏமாற்றுக்காரன் "
கிரிக்கெட் சூதாட்டக்காரர் வின்சென்ட் இன்று வாக்குமூலம் கொடுத்தார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஆயுள் தடை விதிக்கப்படும் நிலையில் உள்ள முன்னாள் நியூசிலாந்து வீரர் லூ வின்சென்ட் தனது தவறுகளை ஒப்புக் கொண்டு இன்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவர் மீது இங்கிலாந்து கிரிக்கெட் சபை 14 சூதாட்டப் புகார்களை எழுப்பியது. 2011ஆம் ஆண்டு Sussex அணிக்கு ஆடிய போது இரண்டு போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், Lancashire அணிக்கு எதிரான இருபது ஓவர் போட்டி, Kent அணிக்கு எதிரான 40 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இவர் சூதாட்டம் அம்பலமாகியுள்ளது.
இதுமாத்திரமல்லாமல் முன்னாள் வீரர்கள் பலரிடம் இவர் சென்று மோசமாக ஆட பணம் தருவதாக கூறியதும் அவர்கள் அதனை மறுத்ததும், பின்பு வின்சென்ட் இதனை ஒப்புக்கொண்டதும் அண்மைய நாட்களில் பரபரப்பான விடயமாக மாறியிருந்தது.
இந்தநிலையில் இவர் தற்போது வெளிப்படையாக தனது தவறுகளை ஒப்புக் கொண்டு அளித்துள்ள
ஒப்புதல் அறிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகளை கிரிக்கெட் உலகுக்கு சொல்லியுள்ளார்.
"நான் ஒரு ஏமாற்றுக்காரன், தொழில்பூர்வ விளையாட்டு வீரர் என்ற எனது தகுதியை துஷ்பிரயோகம் செய்து விட்டேன். ஆட்டத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய பணம் வாங்கினேன்.
இந்த இருண்ட ரகசியத்துடன் நான் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தவறை உணர்ந்து உண்மையைக் கூற முடிவெடுத்தேன். இந்த உண்மை நியூசிலாந்து கிரிக்கெட்டில் குழப்ப நிலையையும் , சர்வதேச கிரிக்கெட் உலகில் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
நான் எனது நாட்டிற்கும், கிரிக்கெட்டிற்கும் தீராப்பழியை உருவாக்கி விட்டேன். எனக்கு நெருக்கமானவர்களையும் இதன் மூலம் அவமானப்படுத்தி விட்டேன். நான் என் மீதும் என் ஆட்டத்தின் மீதும் நம்பிக்கை இழந்து விட்டேன், நான் நேசித்த இந்த விளையாட்டை துஷ்பிரயோகம் செய்து கறைப்படுத்தி விட்டேன்.
நான் செய்த தவறுகளை நானேதான் சரிசெய்ய முடியும்.
நான் செய்த தகாத காரியங்களின் விளைவுகளைச் சந்திக்கும் நேரம் வந்து விட்டது. விளைவுகளை ஒரு மனிதனாக நான் ஏற்கக் கடமைப்பட்டுள்ளேன்...
இது முழுதும் என்னுடைய தவறே, என்னால் இனி கிரிக்கெட் ஆட்டத்தின் முன் ஒரு நாணயமான மனிதனாக நிற்க முடியாது.
எனக்குக் கொடுக்கப்படும் தண்டனையை ஏற்கிறேன்."
இவ்வாறு கூறிய வின்சென்ட் தனது மனைவியினால் உண்மையைக் கூறும் தைரியம் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். அதன்மூலமாகவே இவ்வளவு நாளும் பொத்தி பொத்தி மறைத்து வைத்த உண்மைகளை இன்று சொன்னதாகவும் அவர் குறிப்பிடுள்ளார்.
ஜூன் மாதம் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டமைக்காக 3 ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையும் இவருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது.
இவர் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சார்பாக 2001-2007 வரையான காலப்பகுதியில் 23 டெஸ்ட்,103 ஒருநாள் போட்டிகள்,9 Twenty 20 போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சூதாட்டத்தை முற்றாக ஒழிப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் அடிக்கடி புதிது புதிதாக சூதாட்ட தகவல்கள் அம்பலமாகி அதிர்ச்சி கொடுக்கின்றமை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி + கவலையே.