இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜிம்மி அன்டர்சன் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை அவதூறு செய்தார் ; தள்ளிவிட்டார் என்ற சிக்கலில் தண்டனையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது இன்னொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு சிக்கல் தேடி வந்துள்ளது.
இங்கிலாந்தின் டெஸ்ட் அணியின் 3ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக அண்மைக்காலத்தில் தன்னை நிரூபித்து பிரகாசிக்க ஆரம்பித்துள்ள கரி பலன்ஸ் தான் புதிய சர்ச்சையில் அகப்பட்டுள்ள புதிய குழப்படிகாரர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த இந்திய - இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் நொட்டிங்காம் பிரதேசத்திலுள்ள க்ளப் ஒன்றுக்கு சென்றுள்ள இங்கிலாந்து வீரர்களான ஜோ ரூட், ஜிம்மி அண்டர்சன் (இவர் ஏற்கெனவே சிக்கலில் மாட்டியுள்ளவர்), லயம் பிளங்கட் ஆகியோரோடு மது அருந்திய பலன்ஸ், கொஞ்ச நேரத்துக்குப் பின் நிதானம் தவறியவராக தனது மேற்சட்டையைக் கழற்றி கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார்.
"இங்கிலாந்து, இங்கிலாந்து " என்று கூச்சல் போட்டுக்கொண்டே உற்சாக மிகுதியால் கூத்தாடிய பலன்ஸ் இறுதியில் நிறை போதையில் மற்றவர்களால் தூக்கிச் செல்லப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
இதுபற்றி அறிந்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை பலன்சுக்கு எச்சரிக்கை வழங்கியுள்ளது.