2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், மொத்தம் 20 அணிகள் விளையாடவுள்ளன.
இதில் தொடரை நடத்தும் அடிப்படையில் நடப்பு சம்பியன் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தானாகவே தகுதி பெற்றுவிட்டன.
இந்தத் தொடரில் வெற்றி பெற்று கிண்ணத்தைத் தக்கவைக்கும் நோக்கில், இந்திய அணி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறது.
அதன் முதல் கட்டமாக சுப்மன் கில்லை இந்திய T20 அணியின் புதிய துணைத் தலைவராக நியமித்துள்ளது.
இந்நிலையில் 2026 T20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் தோனியை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், இது தொடர்பாக தோனியை பி.சி.சி.ஐ. நிர்வாகம் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இதற்கு தோனி என்ன முடிவெடுத்துள்ளார்? என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு 3 விதமான (T20, ஒருநாள் மற்றும் சம்பியன்ஸ் கிண்ணம்) ஐ.சி.சி. கிண்ணங்களை வென்று கொடுத்த தலைவர் என்ற பெருமைக்குரிய மகேந்திரசிங் தோனி, 2021 இல் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டார். ஆனால், அந்தத் தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.