SA 1107 - 7626 என்ற கோள் ஒவ்வொரு வினாடியும் சுமார் 600 கோடி டன் வாயுப் பொருட்களைத் தனக்குள் ஈர்த்துக்கொள்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
நாசா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உலகளாவிய விண்வெளி ஆய்வாளர்கள், வளிமண்டலக் கோள்கள் குறித்த ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விஞ்ஞானிகள் ஒரு விண்வெளியில் தனித்துச் சுற்றும் கோள் (Rogue Planet) குறித்த ஆச்சரியமூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். ‘SA 1107 - 7626’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள், வழக்கத்திற்கு மாறாக எந்த ஒரு நட்சத்திரத்தையும் (சூரியன் போன்ற) சுற்றாமல் தனித்துச் சுற்றுகிறது.
கடந்த சில மாதங்களாக இந்தக் கோள் தனது சுற்றுவட்டப் பாதையில் உள்ள பொருட்களை அதிவேகமாக விழுங்கி வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கோள் விழுங்கும் பொருட்களின் அளவு மற்றும் வேகம் இதற்கு முன் பார்த்ததில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்கள் மட்டுமே பொருட்களைத் தனக்குள் ஈர்த்து வளர்ச்சி அடையும் என்று கருதப்பட்டது. ஆனால் விண்வெளியில் தனித்துச் சுற்றும் ஒரு கோள் இவ்வளவு தீவிரமாக வளர்வது இதுவே முதல் முறை என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.