டி20 உலகக்கிண்ண தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு ஆகிய அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவு அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றது இதில் ரோஸ்டன் சேஸ் 40 ஓட்டங்களையும் , ஹோல்டர் 37 ஓட்டங்களையும், பாவெல் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர் .
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களைப்பெற்று அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் தகுதிபெற்றுள்ளது.இந்தநிலையில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 97 ஓட்டங்களை பெற்று இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
அத்துடன் கேரளாவில் இருந்து தற்போது இந்திய அணிக்காக விளையாடும் ஒரே கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சனின் இந்த வாழ்நாள் ஆட்டத்தை மலையாள முன்னணி நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த வரிசையில் மோகன்லால், மம்முட்டி, பசில் ஜோசப் ஆகியோர் சஞ்சு சாம்சனை பாராட்டி பதிவிட்டுள்ளதுடன் , சச்சின், யுவராஜ் சிங் ஆகியோரும் சாம்சனை பாராட்டி பதிவிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.