சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கின்ற ஒரு பொதுவான பிரச்சினை முடி உதிர்வு பிரச்சினை தான்.
முடி உதிர்வு பிரச்சினையானது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவு முறை, ஒழுங்கு முறையற்ற கூந்தல் பராமரிப்பு, சரியான தூக்கமின்மை, மன அழுத்தம், நிம்மதி அற்ற வாழ்க்கை, என பல்வேறு காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
இருப்பினும் ஒருவருக்கு முடி உதிர்கின்றதென்றால் அதனை ஆரம்பத்திலேயே சீர்செய்யவேண்டியது அவசியமானது. இல்லையேல் முடியானது விரைவினில் உதிர்ந்துவிடும். முடி உதிர்வு பிரச்சினையை சரி செய்ய பல இயற்கை முறைகள் உள்ளது.
அந்த வகையில் அரிசி கழுவிய தண்ணீர் இம்முடி உதிர்வு பிரச்சினைக்கு சிறந்த தீர்வினை கொடுக்கக்கூடியது. சரி இன்றைய அழகுக்குறிப்புகள் பகுதியில் இதனை பற்றி பார்ப்போம்.
தினமும் அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு தலையை அலசிக்கொள்ளலாம். இருப்பினும் இட்லிக்கு ஊறவைத்த அரிசி தண்ணீரை தலை அலச பயன்படுத்தினால் மிகவும் நல்லது. ஏனெனில் அதனை பன்னிரண்டு மணி நேரம் நன்றாக ஊறவைத்திருப்போம். அதேபோல அரிசி கழுவிய தண்ணீர் நன்கு வதங்கிய தண்ணீர் போல இருக்கும் .
அதில் முடிவளர்ச்சியை தூண்ட கூடிய ஊடட சத்துக்களும் நிறைந்திருக்கும். எனவே இட்லிக்கு ஊற வைக்கும் அரிசி தண்ணீரை கூட தலை அலசுவதற்கு பயன்படுத்தலாம். வாரத்தில் இரண்டு, மூன்று முறையாவது இவ்வாறு தலை அலசுவோம். அப்போது தலையை சுத்தமாக அழுக்கு இல்லாமல் நன்றாக சீகைக்காய் அல்லது ஷாம்பு போட்டு நன்கு அலசி விடுங்கள்.
பின்னர் அரிசி கழுவிய தண்ணீரில் ஒரு விற்றமின் 'ஈ' மாத்திரையை பிழிந்து விட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு அந்த நீரை தலையில் ஊற்றி நன்றாக அலசுங்கள். முடி வளர விற்றமின் 'ஈ' நன்கு உதவுகின்றது. பின்னர் ஏறத்தாழ இருபது நிமிடங்கள் வரை தலையை அலசாமல் நன்கு ஊற வைத்த பின்பு மீண்டும் ஒரு முறை தலையை சுத்தமாக அலசுங்கள்.
ஆனால் இந்த தடவை தலைக்கு சீகைக்காயோ அல்லது ஷாம்புவோ பயன்படுத்தக்கூடாது. இம்முறையினை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை செய்துவர முடி உதிர்வு பிரச்சினை நீங்கி முடி அடர்த்தியாக வளரும்.
நரைமுடி கருமையாகவும் மாறும். எனவே மேற்சொன்ன வழிமுறையினை பின்பற்றி முடிஉதிர்வு பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.