கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை ஆரம்பமான கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளின் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவி பரந்தாமன் அபிஷாலினி புதிய கனிஷ்ட தேசிய சாதனை நிலைநாட்டினார்.
முதல் தடவையாக தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றும் 15 வயதான அபிலாஷினி, கோலூன்றிப் பாய்தலில் 3.15 மீற்றர் உயரம் தாவி புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அவரது சக பாடசாலை மாணவியான மதிவாணன் ஷாலினி 2.80 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி மாணவி சிவபாதம் சுவர்ணா 2.70 உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
கோலூன்றிப் பாய்தலுக்கான பயிற்சிகளை கடந்த வருடம் ஆரம்பித்த அபிஷாலினியும் ஷாலினியும் தங்களது முதல் முயற்சியிலேயே பதக்கங்கள் வென்றமை பாராட்டுக்குரியதாகும். அவர்கள் இருவருக்கும் கனாதீபன் பயிற்சி அளித்துவருகின்றார்.
அபிஷாலினி தனது முதல் முயற்சியில் 2.50 மீற்றர் உயரத்தை தாவியதுடன் தொடர்ந்து 2.70 மீ., 2.80 மீ. 2.90 மீ. ஆகிய உயரங்களை இலகுவாகத் தாவி 3.15 மீற்றரை இரண்டாவது முயற்சியில் தாவி கனிஷ்ட தேசிய சாதனையை நிலைநாட்டினார். இப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுவர்ணாவுக்கு சுபாஷ்கரன் பயிற்சி அளித்துவருகின்றார்.